புதுடெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான சம்பள ஒப்பந்தபட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் இளம் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோருக்கு ‘பி’ பிரிவில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பள ஒப்பந்த பட்டியலின் காலக்கட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வரும் செப்டம்பர் மாதம் வரையிலானது. இருப்பினும் தற்போதுதான் இதை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சம்பள ஒப்பந்த பட்டியலில் ரூ.50 லட்சத்துக்கான ‘ஏ’ பிரிவில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்த கேப்டன் ஹர்மான் பீரீத் கவுர், நட்சத்திர பேட்டர் ஸ்மிருதி மந்தனா, ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா ஆகியோர் அப்படியே தொடர்கின்றனர்.
அதேவேளையில் ராஜேஷ்வரி கெய்க்வாட் ‘பி’ பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் சம்பளமாக ரூ.30 லட்சம் பெறுவார்கள். கடந்த ஆண்டு சம்பள பட்டியலில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்தசுழற்பந்து வீச்சு வீராங்கனை பூனம்யாதவுக்கு இம்முறை ஒப்பந்தபட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை. கடைசியாக அவர், இந்திய அணிக்காக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் விளையாடி இருந்தார்.
இதேபோன்று சீனியர் வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஷிகா பாண்டே, விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா ஆகியோரும் சம்பள ஒப்பந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இது ஒருபுறம் இருக்ககடந்த ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இடம் பெறாத வேகப்பந்து வீச்சுவீராங்கனை ரேணுகா தாக்குர்இம்முறை நேரடியாக ‘பி’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் ரூ.10 லட்சம் கொண்ட ‘சி’ பிரிவில் இருந்து ரூ.30 லட்சத்துக்கான ‘பி’ பிரிவுக்கு முன்னேறி உள்ளனர். இந்த பிரிவில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மாவும் இடம் பெற்றுள்ளார்.
‘சி’ பிரிவில் வேகப்பந்து வீச்சுவீராங்கனை மேக்னா சிங், பேட்டர்தேவிகா வைத்யா, தொடக்க வீராங்கனை எஸ்.மேக்னா, ராதா யாதவ்,இடது கை வேகப்பந்து வீச்சாளர்அஞ்சலி சர்வானி, பேட்டர் யாஷ்டிகா பாட்டியா ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஹர்லீன் தியோல், ஸ்னே ராணா ஆகியோரும் இதே பிரிவில்தான் உள்ளனர். ஆல்ரவுண்டரான பூஜா வஸ்த்ரகர் ‘பி’ பிரிவில் இருந்து ‘சி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பள ஒப்பந்த பட்டியலில் மொத்தம் 17 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.- பிடிஐ