பீலே | கோப்புப்படம் 
விளையாட்டு

கால்பந்து அரசன் 'பீலே'வின் பெயரை பொருள்பட சேர்த்து கவுரவித்த பிரேசில் அகராதி!

செய்திப்பிரிவு

சாவோ பாவ்லோ: கால்பந்து விளையாட்டின் அரசின் பீலேவின் பெயரை போர்ச்சுகீஸ் (Portuguese) மொழி அகராதியில் பொருள்பட பெயரடையாக சேர்த்துள்ளது Michaelis Portuguese அகராதி. இது பிரேசில் நாட்டில் இருந்து வெளிவரும் அகராதியாகும். இதன் மூலம் உலகில் போர்ச்சுகீஸ் மொழியை பேசி வரும் 265 மில்லியன் மக்களுக்கு ‘பீலே’ அர்த்தமுள்ள சொல்லாக மாறியுள்ளது.

சுமார் 1,67,000 சொற்கள் அடங்கிய அந்த அகராதியில் பீலேவின் பெயரும் ஒன்றாக தற்போது இணைந்துள்ளது. பீலே என்றால் ‘அபூர்வமான, ஒப்பற்ற, தனித்துவமான’ என்ற பொருளை குறிப்பிடும் வகையில் அந்த அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பீலே என்றால் ‘தன் பணியில் சிறந்து விளங்கும் ஒருவரை’ குறிப்பிட்டு சொல்லி வருவதாகவும் பீலே அறக்கட்டளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது 82-வது வயதில் பீலே காலமானார். இப்போதைக்கு ‘பீலே’ எனும் சொல் Michaelis Portuguese அகராதியின் ஆன்லைன் பதிப்பில் இடம்பெற்றுள்ளதாகவும். வரும் நாட்களில் அச்சு பிரதியில் இடம்பெறும் எனவும் தெரிகிறது.

பீலே பிரேசில் அணிக்காக 1957 முதல் 1971 வரை விளையாடி 92 போட்டிகளில் 77 கோல்களை பதிவு செய்துள்ளார். அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலும் சேர்த்து சுமார் 1,281 கோல்களை பதிவு செய்துள்ளார். ‘ஃபிஃபாவின் நூற்றாண்டுக்கான சிறந்த வீரர்’ என்ற விருதை மற்றொரு கால்பந்து ஜாம்பவானும், தனது நண்பருமான மரடோனாவுடன் பீலே பகிர்ந்து கொண்டார்.

SCROLL FOR NEXT