டேவிட் வார்னர் 
விளையாட்டு

அன்று ஹைதராபாத் அணிக்காக கொடி பிடித்தார்; இன்று அதே அணிக்கு எதிராக வாகை சூடிய வார்னர்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. ஹைதாரபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வார்னர் தலைமையிலான டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வார்னர் குறித்த பதிவுகள் சமூக வலைதளத்தில் தூக்கலாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. 145 ரன்கள் என்ற இலக்கை விரட்டி ஆட்டத்தை இழந்துள்ளது ஹைதராபாத்.

36 வயதான வார்னர் கடந்த 2009 முதல் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். கடந்த 2014 முதல் 2021 வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர். அவர் தலைமையிலான ஹைதராபாத் அணி 2016-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இருந்தும் 2021 சீசனில் ரன் சேர்க்க தடுமாறிய வார்னர் மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டார். கேப்டனாக இருந்த அவர் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். பவுண்டரி லைனுக்கு வெளியே காத்திருந்தார். அதன் பின்னர் சன்ரைசர்ஸ் அணி விளையாடிய போது பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி கொடி பிடித்து, அணிக்கு ஊக்கம் கொடுத்தார். அணியில் அவரது புறக்கணிப்பு குறித்து அப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

சன்ரைசர்ஸ் அணிக்காக வார்னர் குவித்த ரன்கள்

  • 2014 - 528 ரன்கள்
  • 2015 - 562 ரன்கள்
  • 2016 - 848 ரன்கள்
  • 2017 - 641 ரன்கள்
  • 2019 - 692 ரன்கள்
  • 2020 - 548 ரன்கள்
  • 2021 - 195 ரன்கள்

2021 ஐபிஎல் சீசன் முடிந்த கையோடு இழந்த ஃபார்மை மீட்டெடுத்தார் வார்னர். 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக 289 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அரைசதம் பதிவு செய்து ஆஸி. அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்ல துணை புரிந்தார். அடுத்த சீசனில் அவர் ஹைதராபாத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை டெல்லி கேபிடல்ஸ் அணி 6.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.

நடப்பு சீசனில் ரிஷப் பந்த் இல்லாத காரணத்தால் டெல்லி அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. வரிசையாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை டெல்லி பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றியில் டெல்லி அணிக்காக அக்சர் படேல், மணிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், கடைசி ஓவரை வீசிய முகேஷ் குமார் ஆகியோரின் பங்கு அதிகம். இருந்தாலும் ஹைதராபாத் அணிக்கு எதிராக அந்த அணியின் சொந்த மைதானத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் ஆடுகளத்தில் அப்படியே ஆக்ரோஷத்தில் ஆர்பரித்து எழுந்தார் வார்னர். அது அவரது உணர்வுகளின் வெளிப்பாடு என்றே ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். ஆம், அன்று ஹைதராபாத் அணிக்காக கொடி பிடித்தார். இன்று அதே அணிக்கு எதிராக வாகை சூடிய வார்னரின் உணர்வுகள்தான் அது. புறக்கணிப்பு எனும் வலியை தாங்கிய வீரரின் உணர்வு.

SCROLL FOR NEXT