விளையாட்டு

IPL 2023: RCB vs PBKS | சிராஜ் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப் - ஆர்சிபி 24 ரன்களில் வெற்றி

செய்திப்பிரிவு

பஞ்சாப்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய ஆர்சிபி 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஃபாப் டு பிளெசிஸ் 56 பந்துகளில் 86 ரன்களையும், விராட் கோலி 47 பந்துகளில் 59 ரன்களையும் சேர்த்தனர். மற்றவர்கள் 10 ரன்களைக் கூட தாண்டவில்லை.

இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப்பின் அதர்வ தைடே முதல் பந்திலேயே அவுட்டானார். தொடர்ந்து மேத்யூ ஷார்ட் போல்டாக, லியாம் லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் கிளம்பினார். ஹர்பிரீத் சிங் பாட்டியா 13 ரன்களிலும், சாம் கரன் 10 ரன்களிலும் விக்கெட்டாக பிரப்சிம்ரன் சிங் நிலைத்து ஆடினாலும் 46 ரன்களில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

ஜிதேஷ் ஷர்மா மட்டும் 41 ரன்களைச் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த பஞ்சாப் 18.2 ஓவர்களில் 150 ரன்களுடன் சுருண்டது. இதன் மூலம் ஆர்சிபி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வெற்றிகொண்டது.

ஆர்சிபி அணி தரப்பில், முஹம்மத் சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT