மும்பை: முதுகுவலி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவின் உடல் நிலை குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, முதுகுவலி காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை. பிசிசிஐ மருத்துவக்குழுவின் அறிவுரையின் படி காயத்துக்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நியூஸிலாந்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் பும்ரா. இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளார் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுகு வலி காயத்துக்காக பும்ரா நியூஸிலாந்தில் அறுவை சிகிச்சை செய்தார், அது வெற்றிகரமாக முடிந்திருந்தது. தற்போது அவர், வலி இல்லாமல் உள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து 6 வாரங்களுக்கு பிறகு பயிற்சி மற்றும் சிகிச்சை மூலம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் நடவடிக்கைகளை அவர், மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கி இருந்தனர்.
இதன்படி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா பயிற்சி மற்றும் சிகிச்சை முறைகளை தொடங்கி உள்ளார்.