பெங்களூரு: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்துள்ளது.
16-ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றை லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லக்னோ டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் இணை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. 44 பந்துகளில் 61 ரன்களை விளாசி அணிக்கு பக்கபலமாக திகழ்ந்த கோலியை அமித் மிஸ்ரா அவுட்டாக்கினார்.
அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஃபாஃப் டு பிளெசிஸ் கைகோத்தார். இருவரும் லக்னோவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 27 பந்துகளில் 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 17 ஓவரில் டு பிளெசிஸ் அடித்த பந்தை குருணால் பாண்டியா மிஸ் செய்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது.
தொடர்ந்து 44 பந்துகளில் 100 ரன்கள் என இருவரின் பாட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் லக்னோ பவுலர்கள் திணறினர். அடித்து வெளுத்த மேக்ஸ்வெல்லை 19.5 ஓவரில் மார்க் வுட் அவுட்டாக்கினார். 29 பந்துகளில் 59 ரன்களை சேர்த்த மேக்ஸ்வெல், 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஆர்சிபி 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஃபாப் டு பிளெசிஸ் 79 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். டாப் 3 பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணி தரப்பில் அமித் மிஸ்ரா, மார்க் வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.