கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடாத 19 வயதான இளம் வீரர் சுயாஷ் சர்மாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களம் காண செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். லெக் ஸ்பின்னரான அவர் குறித்து யாரும் அறிந்திடாத சூழலில் அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை வீண் போகச் செய்யவில்லை. யார் அவர்?
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுக்க 10 அணிகளும் பல கோடி ரூபாய் அளவுக்கு போட்டி போட்டன. இந்த டிமாண்ட் பெற்ற வீரர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட் அல்லது டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தங்களது ஆட்டத்திறனை ஏதேனும் ஒரு கட்டத்தில் நிரூபித்தவர்கள். ஆனால், சுயாஷின் கதை முற்றிலும் வேறானது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் லிஸ்ட் ஏ, முதல் தர கிரிக்கெட், டி20 என எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாதவர் சுயாஷ். ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக இரண்டாவது இன்னிங்ஸில் களம் கண்டார். தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரண் சர்மா ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு தன் பங்களிப்பை வழங்கி இருந்தார்.
19 வயதான அவர் கிழக்கு டெல்லியில் உள்ள பஜன்புராவை சேர்ந்தவர். கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவரது அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் வாங்கி இருந்தது. அவர் 25 வயதுக்கு உட்பட்டோருக்கான டெல்லி கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
கொல்கத்தா அணி மேற்கொண்ட இளம் வீரர்களை அடையாளம் காணும் தேடுதல் படலத்தின் மூலம் சுயாஷ் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கிரிக்கெட் பயணம் தொடங்கியுள்ளது. கிரிக்கெட் பயிற்சியாளர் சுரேஷ் பாத்ரா மூலம் முன்னாள் டெல்லி கிரிக்கெட் வீரர் கத்தார் நாத்துக்கு சுயாஷ் சர்மா அடையாளம் காணப்பட்டுள்ளார். இருந்தும் டெல்லி அணியில் அவருக்கான இடம் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. அதற்காக அவர் போராட வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் கொல்கத்தா அணி நடத்திய ட்ரையலில் சுயாஷ் தேர்ச்சி பெற்றுள்ளார். நல்ல வேகத்தில் லெக் ஸ்பின்னும், கூக்ளியும் வீசி தேர்வாளர்களை ஈர்த்துள்ளார். அதன்பின்னர் அவரை கொல்கத்தா ஏலத்தில் வாங்கியுள்ளது. இதற்கு முழு காரணம் கொல்கத்தாவின் அந்த இளம் வீரர் தேடுதல் படலம்தான் என்கிறார் அணியின் சிஇஓ வெங்கி மைசூரு.
“பேட்ஸ்மேனுக்கு உள்ளே, வெளியே என பந்து வீசுகிறார். அவரை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள கொஞ்சம் தடுமாறுகிறார்கள். அவரது அணுகுமுறையும், கேம் ஸ்பிரிட்டும் சிறப்பாக உள்ளது. அதை எங்கள் முகாமில் நாங்கள் பார்க்க முடிகிறது. அவரை ட்ரையல் போட்டிகளில்தான் நாங்கள் பார்த்திருந்தோம்” என கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் தெரிவித்துள்ளார்.
முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் இந்த இளம் வீரர். “கரோனா காலத்தில் கிரிக்கெட்டில் அவருக்கு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவரது கிரிக்கெட் விளையாட்டுக்கு விடை கொடுக்க அவரது குடும்பத்தினரும் ஆலோசித்தார்கள். அது குறித்து அவரது அம்மா என்னிடம் போன் செய்து தெரிவித்தார். கொஞ்ச காலம் காத்திருங்கள் என அவரது அம்மாவிடம் கேட்டுக் கொண்டேன். அவர் எனது வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்தார். அதன் பின்னர்தான் இந்த வாய்ப்புகள் அவருக்கு வந்தது. பெங்களூரு அணிக்கு எதிராக சில டெலிவரிகளை தான் அவர் சிறப்பாக வீசி இருந்தார். இந்த பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். அவருக்கு அபார திறன் உள்ளது. கொல்கத்தா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என கத்தார் நாத் தெரிவித்துள்ளார்.
இந்த இளம் வீரர் இன்னும் நெடுந்தூரம் பயணித்து பல சாதனைகள் புரியட்டும்..!