விசாகப்பட்டினம்: சர்வதேச கிரிக்கெட் உலகின் அசாத்திய வீரர்களில் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. சிறந்த கேப்டன், சிறந்த ஃபினிஷர், சிறந்த விக்கெட் கீப்பர் என அறியப்படுகிறார். இப்படி பல விதமாக அவர் போற்றப்பட்டு வருகிறார். இருந்தாலும் இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அந்த ஒரு இன்னிங்ஸ்தான்.
தோனி, 2004 இறுதியில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால், அவர் தனது வருகையை சம்மட்டியால் அடித்தது போல சொல்லியதும் இந்த இன்னிங்ஸில்தான். அதற்கு முந்தைய மற்றும் அவரது முதல் 4 ஒருநாள் இன்னிங்ஸில் எடுத்த ரன்கள் 0, 12, 7*, 3 ரன்கள் என இருந்தது. அவர் யார் என்பதை அறிய செய்ததும் அந்த இன்னிங்ஸ் தான்.
இதே நாளில் கடந்த 2005-ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது பேட்டிங் திறனை ஒரு காட்டு காட்டி இருந்தார் தோனி. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 123 பந்துகளில் 148 ரன்களை எடுத்தார். 15 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் இதில் அடங்கும். சச்சின் 2 ரன்களில் அவுட்டாக டாப் ஆர்டரில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் கண்டு தோனி ஆடிய ஆட்டம் அது. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத ஆட்டமாகவும் அமைந்தது.
அதன் பின்னர் அனைத்தும் தோனிக்கு சாதகமானது. திரும்பிப் பார்க்க கூட நேரம் இல்லாமல் கிரிக்கெட் உலகில் பம்பரமாக சுழலத் துவங்கினார். அந்த நாள் எம்.எஸ்.தோனி படத்தில் வரும் ஒரு காட்சியை நினைவுப்படுத்தும் விதமாக இருக்கும். “சார், நான் என்ன செஞ்சுகிட்டு இருக்கேன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். என்ன ப்ரூப் பண்ண எனக்கு வாய்ப்பும் கிடைக்கல. வாய்ப்புக்காக காத்திருக்கிற கொடுமை என்ன மாதிரி ஆளுக்கு தான் தெரியும் சார்” என தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங், ஒரு ரயில் நிலையத்தில் தனது மேல் அதிகாரியிடம் உருக்கமாக சொல்வார். அந்த வகையில் டாப் ஆர்டரில் பேட் செய்யும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறனை அந்த இன்னிங்ஸில் தோனி நிரூபித்திருப்பார்.