சலீம் துரானி | கோப்புப்படம் 
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி காலமானார்

செய்திப்பிரிவு

ஜாம்நகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி காலமானார். அவருக்கு வயது 88. குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் இல்லத்தில் அவர் உயிரிழந்தார்.

ஆல்-ரவுண்டரான அவர் இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்திய அணிக்காக விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்; 1,202 ரன்களை எடுத்துள்ளார். 1961-62 காலகட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்காக முக்கிய பங்காற்றி மாஸ் காட்டியவர் துரானி.

இந்திய அணியில் இருந்து 1967 முதல் 1970 வரையில் சுமார் நான்கு ஆண்டு காலம் அவர் டிராப் செய்யப்பட்டிருந்தார். இருந்தும் அதன் பிறகு அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுத்து அசத்தி இருந்தார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 95-வது வீரர் துரானி.

முதல் தர கிரிக்கெட்டில் 8,545 ரன்களை எடுத்துள்ள சலீம் துரானி, 484 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அன்றைய காலகட்டத்தில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வீரர்களில் அவரும் ஒருவர். 1973-ல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடாத சூழலில் ரசிகர்கள் கிளர்ந்தெழுந்து தங்கள் எதிர்ப்பை அப்போது களத்தில் பதாகை மூலம் ‘No Durani, No Test’ என தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT