விளையாட்டு

தொடர்ச்சியாக 3வது சதமடித்தார் நமன் ஓஜா; உமேஷ் யாதவ் அதிரடி 90 ரன்கள்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மீண்டும் சதமடித்தார் நமன் ஓஜா. இந்தியா ஏ அணி தன் முதல் இன்னிங்சில் 501 ரன்கள் எடுத்து 78 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடி இரட்டைச் சதம் பிறகு 2வது இன்னிங்ஸில் விரைவு சதம் கண்ட நமன் ஓஜா இன்று 134 பந்துகளில் 18 பவுண்டரி 3 சிகர்கள் சகிதம் 110 ரன்கள் எடுத்து இந்தத் தொடரில் முதல் முறையாக ஆட்டமிழந்தார்.

முதல் டெஸ்ட் போலவே இந்தியா ஏ 268/6 என்று போராடிக் கொண்டிருந்த வேளையில் நமன் ஓஜாவின் சதம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் 66 பந்து 90 ரன்களும் இந்தியா ஏ அணியை 501 ரன்களுக்குக் கொண்டு சென்றது.

உமேஷ் யாதவ் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 66 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார்.

இந்தியா சரிந்து விடும் நிலையில் இருந்த போது களமிறங்கிய நமன் ஓஜா, எதிர் தாக்குதல் பேட்டிங்கைக் கையாண்டார். வந்தவுடன் ஒரு பவுண்டரி பிறகு நேதன் லயன் பந்தை ஒரு சிக்ஸ் என்று ஆரம்பித்தார்.

முன்னதாக மனோஜ் திவாரி (63), பாபா அபராஜித் (28) விரைவில் பெவிலியன் திரும்ப, நமன் ஓஜா இறங்கியவுடன் 9 ஓவர்களில் 67 ரன்கள் விளாசப்பட்டது.

ராயுடு (40) புதிய பந்தில் அவுட் ஆனார். எனினும் ஓஜாவுடன் இணைந்து 69 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு நேதன் லயன், பாய்ஸ் என்ற ஸ்பின் கூட்டணியை ஆஸ்திரேலியா ஏ நம்ப நமன் ஓஜா அவர்கள் இருவரையும் நன்றாக வெளுத்து வாங்கினார். நேதன் லயன் 30 ஓவர்களில் 147 ரன்கள் விக்கெட் இல்லை. லெக் ஸ்பின்னர் கேமருன் பாய்ஸ் 23 ஓவர்களில் 101 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

அமித் மிஸ்ரா தன் பங்கிற்கு ஒரு 36 ரன்களை எடுத்து அவுட் ஆனார். நமன் ஓஜா 8வது விக்கெட்டாக ஸ்கோர் 389 ரன்கள் இருந்த போது ஆட்டமிழந்தார். அனுரீத் சிங் 8 ரன்களில் ஆட்டமிழக்கும்போது இந்தியா ஏ 419/9. ஆனால் அதன் பிறகு 15 ஓவர்களில் 82 ரன்கள் விளாசப்பட்டது. உமேஷ் யாதவ் 24 ரன்களிலிருந்து 90 ரன்களுக்கு முன்னேறினார். பும்ரா 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

நாளை ஆட்டத்தின் கடைசி நாள்.

SCROLL FOR NEXT