ருதுராஜ் கெய்க்வாட் 
விளையாட்டு

IPL 2023: CSK vs GT | ருதுராஜ் அபாரம்: 178 ரன்கள் குவித்த சென்னை

செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 178 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் அபாரமாக ஆடி 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. சென்னை அணிக்காக கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். கான்வே, 1 ரன் எடுத்த நிலையில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மொயின் அலி, 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பவர்பிளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ், 7 ரன்களில் ரஷீத் கான் சுழலில் சிக்கி வெளியேறினார். இருந்தும் மறுமுனையில் ருதுராஜ் ரன் குவிப்பில் ஈடுபட்டார். ராயுடு, 12 ரன்கள் எடுத்து லிட்டில் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

11 ஓவர்களில் 100 ரன்கள் எட்டியது சென்னை. அதன் பிறகு சென்னை அணியின் ரன் குவிப்பு ஸ்லோவானது. ருதுராஜ், 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 4 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ஜடேஜா, 1 ரன் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு தோனி களம் கண்டார். தூபே, 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை எடுத்தது சென்னை அணி. ரஷீத் கான், ஷமி மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் விரட்டி வருகிறது. தோனி, 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அவர் பவுண்டரி ஒன்றும், சிக்ஸர் ஒன்றும் பறக்கவிட்டிருந்தார்.

SCROLL FOR NEXT