மதுரை : புனேயில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் தேசிய சாதனை படைத்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 21வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் மார்ச் 16 முதல் 21 ம்தேதி நடந்தது. இந்தியா முழுவதுமிருந்து சுமார் 1200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் மூலம் மாநில தடகளப் போட்டியில் தேர்வான தமிழக பாரா தடகள வீரர்கள், வீராங்கனைகள் சுமார் 80 பேர் பங்கேற்றனர்.
பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 5000 மீ நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் 11 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்கள் உள்பட மொத்தம் 29 பதக்கங்கள் பெற்று தமிழக வீரர்கள் ஒட்டுமொத்த அளவில் 5-ம் இடம் பிடித்தனர். இதில்,குறிப்பாக மதுரையைச் சேர்ந்த வீரர்கள்,வீராங்கனைகள் 2 தங்கம், 5 வெண்கல பதக்கம் பெற்றனர்.
இதில், எஃப் 41 பிரிவில் குண்டு எறிதலில் எஃப் 41 பிரிவில் மனோஜ் தங்கப்பதக்கம் பெற்று புதிய தேசிய சாதனை படைத்தார். ஈட்டி எறிதலில் எஃப் 40 பிரிவில் செல்வராஜ் தங்கப்பதக்கம் பெற்றார். குண்டு எறிதல் போட்டியில் எப் 41 பிரிவில் கணேசன்,வெண்கலம், எஃப் 35 பிரிவில் பிரசாந்த் வெண்கலம், வட்டு எறிதலில் எப் 53 பிரிவில் முனியசாமி வெண்கலம், எப் 54 பிரிவில் ஜாஸ்மின் வெண்கலம், குண்டு எறிதலில் எப் 56 பிரிவில் அருண்மொழி வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
பதக்கம் வென்றவர்களையும், பயிற்சி அளித்த மாற்றுத்திறனாளிகளின் தடகள பயிற்சியாளரும், தியான்சந்த் விருதாளருமான ரஞ்சித் குமார் ஆகியோரையும் பாராட்டு பெற்றனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா இன்று மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க.ராஜா தலைமையில் நடைபெற்றது. பயிற்சியாளர்கள் தீபா, குமரேசன் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், தேனி ஆனந்தம் ஜவுளியகம் நிர்வாக இயக்குநர் செல்வராஜ் பங்கேற்று பாராட்டினார்.