விளையாட்டு

பால் பாக்கெட் போட்டு வந்தவர் ‘ஹிட்மேன்’ ஆன உத்வேகக் கதை! - ரோகித் சர்மா குறித்த ஓஜாவின் பகிர்வு

ஆர்.முத்துக்குமார்

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா, மேலும் ஐபிஎல் சாம்பியன் கோப்பையை 5 முறை வென்ற ஒரே கேப்டன் ரோகித் சர்மா, ஒரு காலத்தில் தன் செலவுக்கும் கிரிக்கெட் கிட் வாங்குவதற்கும் பால் பாக்கெட் போட்டு பணம் சேர்த்ததாக முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் பிராக்யன் ஓஜா பகிர்ந்து கொண்டதையடுத்து நெட்டிசன்களிடையே ரோகித் சர்மா குறித்த மீம்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

2007-ல் தோனியின் தலைமையின் கீழ் ரோகித் சர்மா இந்திய அணிக்குள் நுழைந்தாலும் தன் இடத்தைத் தக்கவைக்க அவர் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. 2008 முத்தரப்பு தொடரை தோனி தலைமையில் இந்தியா வென்றபோது மிடில் ஆர்டராக களமிறக்கப்பட்டு, சில பல அருமையான இன்னிங்ஸ்களை ரோகித் சர்மா ஆட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் இவரது அரிய திறமைகளை அப்போதே விதந்தோதினார்.

50 ஓவர் வடிவத்தில் முதன் முதலாக ரோகித் சர்மாவை தோனி ஓப்பனிங்கில் களமிறக்கி அழகு பார்த்தார். இது நடந்தது 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில்தான். தன் கரியரை ஆரம்பிக்கும்போது ரோகித் சர்மாவும் மற்ற எல்லோரையும் போல்தான் திணறினார், போராடினார்.

ரோகித் சர்மாவின் குடும்பம் நிதி நிலையில் வலுவான குடும்பம் அல்ல. அதனால், தனது கிரிக்கெட் செலவுகளை ரோகித் சர்மாதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையே இருந்தது. இந்நிலையில், பிராக்யன் ஓஜா, ரோகித் சர்மாவின் ஆரம்பகால சிரமங்கள் பற்றி அதிர்ச்சி தரும் சில விஷயங்களை வெளியிட்டார்.

பால் பாக்கெட்டுகளை விநியோகித்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தன் கிரிக்கெட் செலவுகளைச் சமாளித்தார் ரோகித் என்று கூறுகிறார் பிராக்யன் ஓஜா. குடும்பத்தின் ஆதரவு இருந்தது. ஆனால் குறிப்பிட்ட அளவு மட்டுமே அவர்களால் உதவ முடிந்தது. “ரோகித் சர்மா மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது ஆரம்ப நாட்களை பேசும்போது அவர் என்னிடம் பலமுறை உணர்ச்சிவயப்பட்டிருக்கின்றார். குடும்பத்திலிருந்து இவருக்கு ஓரளவுக்குத்தான் உதவி செய்ய முடிந்தது. மற்ற செலவுகளுக்கு, கிரிக்கெட் கிட் வாங்குவது உட்பட பல செலவுகளைச் சமாளிக்க ரோகித் சர்மா பால் பாக்கெட்டுகளை விநியோகித்து, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு கிரிக்கெட் செலவுகளை சமாளித்தார். இதெல்லாம் மிக நீண்ட காலம் முன்பு நடந்தது. இன்று அவர் இருக்கும் நிலையைப் பார்க்க பெருமையாக இருக்கின்றது” என்று ஓஜா கூறினார்.

இதனையடுத்து ரோகித் சர்மாவைப் பாராட்டி பலரும் மீம்களை வெளியிட்டுள்ளனர். சில கிண்டல் மீம்களும் இருந்தாலும் அதுவும் அவரது உழைப்பைப் பாராட்டும் விதமாகவே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வரும் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸை மீண்டும் வழிநடத்துகின்றார். கடந்த முறை ரோகித் சர்மா பேட்டிங் மிக மோசமாக அமைந்தது. அணியும் அட்டவணையில் 9-வது இடத்தில் முடிந்தது. எனவே, இந்த முறை அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஈடுகட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மண்ணில் சந்திக்கின்றது இந்திய அணி. எனவே, சவாலான காலம் அவருக்குக் காத்திருக்கிறது.

SCROLL FOR NEXT