விளையாட்டு

3வது டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 445 ரன்கள்

செய்திப்பிரிவு

சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனால் இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 445 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று இன்னமும் 37 ஒவர்கள் மீதமுள்ள நிலையில் ஷிகர் தவான், முரளி விஜய் ஜோடி 2வது இன்னிங்சில் களமிறங்கியுள்ளது. ஆகமொத்தம் இந்தியா 127 ஓவர்களை வெற்றிகரமாக தடுத்தாட்கொள்ள வேண்டும்.

இந்தியா இன்று தன் முதல் இன்னிங்ஸில் 330 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது. பொதுவாக ஒரு அணி 229 ரன்கள் முன்னிலை பெற்று களமிறங்கும்போது எதிரணி ஒன்றும் செய்ய முடியாது. விரைவு ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் அவ்வளவே. ஆனால் அது இந்திய பவுலிங்கை வைத்துக் கொண்டு சுலபமல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

இங்கிலாந்து சுமார் 40 ஓவர்களில் 205 ரன்களை எட்டியது. ராப்சன் விக்கெட்டை புவனேஷ் குமார் அற்புதமான அவுட் ஸ்விங்கரில் வீழ்த்தியதை தவிர நல்ல பந்து வீச்சு இல்லை. மொகமது ஷமி 4 ஓவர்களையே வீசினார் அவரை கேரி பேலன்ஸ் லாங் ஆஃபில் அடித்த சிக்சர் மூலம் இங்கிலாந்து என்ன மனோநிலையில் களமிறங்கியது என்பது புரியவைக்கப்பட்டது. அவர் லைன் மற்றும் லெந்த் ஆகியவற்றைத் தொலைத்து விட்டார். யாராவது ஷமிக்கு அதனைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் நல்லது.

ஜடேஜா, அதாவது ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் பவுலர் என்ற ‘பெயர்’ போனவர், இங்கிலாந்து இன்றும் அவரைப் புரட்டி எடுத்தது. 10 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதிலும் கேரி பாலன்ஸ் நாட் அவுட்டிற்கு அவுட் கொடுக்கப்பட்டது. அவர் 48 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இயன் பெல் இறங்கி தன் பங்கிற்கு ஒரு விரைவு 23 ரன்களை எடுத்து ஜடேஜாவிடம் பவுல்டு ஆனார். ஜடேஜாவின் லெக் ஸ்டம்ப் பந்து வீச்சு அதிசயமாகக் கைகொடுத்த ஒரு தருணம்.

106/3 என்ற நிலையில் ஜோ ரூட், கேப்டன் குக் இணைந்து ஸ்கோரை 205 ரன்களுக்கு 14 ஓவர்களில் உயர்த்தினர். ஜோ ரூட் 41 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் பவுல்டு ஆனார். அத்துடன் டிக்ளேர் செய்தார் குக். அவர் 70 நாட் அவுட்.

இங்கிலாந்து மொத்தம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 774 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. இதுதான் முழு ஆதிக்கத்திற்கான சிறந்த உதாரணம். அதிர்ஷ்டம் கெட்ட பங்கஜ் சிங் 10 ஓவர்கள் வீசி 4 மைடன்களுடன் 33 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டியுள்ளார்.

இதுவே அவரது கடைசி டெஸ்ட்டானாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியா 13/0 என்று ஆடி வருகிறது. டிரா செய்ய முயற்சி செய்து ஆடி தோல்வி தழுவுவதற்குப் பதிலாக வெற்றிக்கு ஒரு மோது மோதிப் பார்க்கலாம். ஆனால் தோனி மிகவும் பாரம்பரியமான மனநிலை படைத்த கேப்டன்.

மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இதனை வெற்றிக்காக ஆடி தோல்வியடைந்தால் தொடர் சமநிலை எய்திவிடும், அதற்குப் பதிலாக டிரா செய்தால் ஒரு வெற்றியுடன் முன்னிலையைத் தக்கவைக்க முடியும் எனவே அந்த முடிவே சிறந்தது என்று நினைத்தாலும் தவறில்லை.

SCROLL FOR NEXT