மெஸ்ஸி | கோப்புப்படம் 
விளையாட்டு

சாம்பியன்ஸ் ஹோம் கம்மிங் | நாட்டு மக்கள் முன்னிலையில் மனம் உருகிப் பேசிய மெஸ்ஸி!

செய்திப்பிரிவு

பியூனஸ் அயர்ஸ்: கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா. இந்நிலையில், சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் பனாமா அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் அர்ஜென்டினா விளையாடியது. உலகக் கோப்பையை வென்ற பிறகு அந்த அணி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இது. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் மெஸ்ஸி தனது 800-வது கோலை அடித்தார்.

பியூனஸ் அயர்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நடைபெற்ற இந்த ஆட்டத்தை காண மைதானத்தில் 83 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்தனர். ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின்போது நாட்டு மக்கள் முன்னிலையில் மெஸ்ஸி மனம் உருகி பேசியுள்ளார். அதோடு உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தை அர்ஜென்டினா அணி வீரர்கள் ரி-கிரியேட் செய்ததாகவும் தகவல்.

“உலக சாம்பியனாக நாட்டிற்கு திரும்புவது எப்படி இருக்கும் என பலமுறை நான் கற்பனை செய்து பார்த்துள்ளேன். ஆனால், இப்போது எனது உணர்வினை நான் வெளிப்படுத்த எண்ணும் போது எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அனைத்து மக்களின் அன்பையும் பெற்ற நான் அதற்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இது ரொம்பவே ஸ்பெஷலான நேரம். அர்ஜென்டினா மக்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடுவதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்பதை மட்டும் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT