இலங்கை - நியூஸிலாந்து இடையிலான போட்டி 
விளையாட்டு

20 ஓவர்கள் கூட பேட் செய்யாத இலங்கை: நையப்புடைந்த நியூஸிலாந்து!

ஆர்.முத்துக்குமார்

ஆக்லாந்தில் இன்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணியை நியூஸிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இத்தனைக்கும் நியூஸிலாந்து அணியில் வில்லியம்சன், சவுதி, கான்வே, சாண்ட்னர், பிரேஸ்வெல் ஆகியோர் இல்லை.

டாம் லேதம் தலைமையிலான நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 274 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை 19.5 ஓவர்களில் 76 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது.

கிரீன் டாப் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சில் இலங்கை முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஃபின் ஆலன் 49 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 51 ரன்களை விளாசினார். டேரில் மிட்செல் 47 ரன்களையும், கிளென் பிலிப்ஸ் 39 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 49 ரன்களையும் அதிரடி முறையில் விளாச 49.3 ஓவர்களில் நியூஸிலாந்து 274 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை தரப்பில் சமிகா கருணரத்னே 4 விக்கெட்டுகளையும் ரஜிதா, குமாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷனகா, மதுஷங்கா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, நியூஸிலாந்தின் புதிய வேகப்பந்து வீச்சாளரான ஹென்றி ஷிப்லியின் ஸ்விங்கிற்கு 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஓய்ந்து போனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 18 ரன்கள் எடுத்திருந்தார். ஹென்றி ஷிப்லி 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல், டிக்னர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற நுவனிது பெர்னாண்டோ ரன் அவுட் ஆனார். 2 ரன்கள் ஓடியாகிவிட்டது, 3வது ரன்னுக்காக அரக்கப்பரக்க ஓடி ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

ஷிப்லி, டிக்னர் மட்டுமல்லாமல் டேரில் மிட்செல் வீசிய எகிறு பந்துகளையும் இலங்கை பேட்டர்களால் சமாளிக்க முடியவில்லை. இலங்கை பவுலர்களின் ஷார்ட் பிட்ச் பவுலிங்கையும் நியூஸிலாந்து பேட்டர்கள் திறம்பட ஆடினார்கள் என்று கூற முடியாது. ஆனால், இலங்கை பேட்டர்களுக்கு சுத்தமாக ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளை கையாளத் தெரியவில்லை.

மூன்றே இலங்கை வீரர்கள்தான் இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினர். ஷிப்லி பந்து வீச்சின் விநோத வேறுபாடு என்னவெனில் வலது கை பவுலரான இவர் இடது காலை முன்னே நீட்டி வீசுபவர் அல்ல, வலது காலையே முன்னால் வைத்து பினிஷ் செய்கிறார். இதனால் கிரீன் டாப்பில் பந்துகள் எகிறுவதோடு, இவரது குட் லெந்த் பந்துகளும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

இலங்கை பேட்டர்கள் தங்களை முழுமையாக தடுப்பாட்டத்தில் செலுத்திக் கொள்ளவில்லை, விக்கெட்டுகளை தூக்கி எறிந்தனர். உள்ளே ஏதோ வேலை இருக்கும் போலிருக்கிறது என்பது போல் அவுட் ஆகிச் சென்றனர். 20வது ஓவரில் ஆல் அவுட் ஆகினர். இது இவர்களது ஆகக்குறைந்த 5வது ரன் எண்ணிக்கையாகும். நியூஸிலாந்துக்கு எதிராக இதுவே முதல் முறையாக ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும்.

3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது. ஆட்டநாயகனாக ஷிப்லி தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT