விளையாட்டு

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - இறுதி சுற்றில் 4 இந்திய வீராங்கனைகள்

செய்திப்பிரிவு

டெல்லி: டெல்லியில் நடைபெறும் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நீது, நிகத் ஜரீன், லோவ்லினா, சாவிட்டி ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் முதன் முதலில் இறுதிச் சுற்றுக்கு (48 கிலோ பிரிவில்) நீது ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டார். கஜகஸ்தானைச் சேர்ந்த அலுவா பால்கிபெகோவை இவர் வென்றபோது நீதுவுக்கு ஒரு பழி தீர்த்த உணர்வு இருந்திருக்கக் கூடும். ஏனென்றால் கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதிச் சுற்றில் அலுவா, நீதுவைத் தோற்கடித்திருந்தார். 50 கிலோ எடை பிரிவு அரை இறுதி சுற்றில் கொலம்பிய வீராங்கனை விக்டோரியாவோடு மோதினார் நிகத் ஜரீன். இதில் நிகத் ஜரீன் 5-0 கணக்கில் வெற்றி பெற்றார்.

75 கிலோ எடை பிரிவு அரைஇறுதியில் இந்தியாவின் லோவ்லினா, சீன வீராங்கனை லீ கியானொடு மோதினார். இதில் லோவ்லினா 4-1 கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வானார். 81 கிலோ எடை பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சாவிட்டி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரீன்ட்ரீ என்பவருடன் மோதினார்.

இந்தப் போட்டியில் பெரும்பாலும் களத்தின் மையப் பகுதியிலேயே இருவரும் தங்கள் திறமையை காட்டிக்கொண்டிருந்தனர். முடிவில் சாவிட்டி 4-3 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் கால்பதித்தார். இந்திய வீராங்கனைகள் 4 பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளதன் மூலம் 4 வெள்ளி பதக்கங்கள் உறுதியாகி உள்ளது.

SCROLL FOR NEXT