விளையாட்டு

ஆஸி.க்கு எதிரான தோல்வியை இந்திய அணி மறந்துவிடக்கூடாது: முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது.

270 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியால் 248 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்துக்கு பின்னர் வர்ணனையாளராக பணியாற்றிய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியதாவது: ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31ல் தொடங்குகின்றன. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்த இந்த ஆட்டத்தை இந்திய வீரர்கள் மறந்துவிடக்கூடாது. இந்திய அணி சில நேரங்களில் இதுபோன்ற தோல்வியை மறந்துவிடும் தவறை செய்துவிடுகிறது. ஆனால் இந்த தோல்வியை மறக்கக்கூடாது. ஏனெனில் வரும் அக்டோபர்-நவம்பரில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவை சந்திக்க நேரிடலாம்.

3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிதோல்வி அடைந்ததற்கு காரணம் ஆஸ்திரேலிய வீரர்கள் கொடுத்த அழுத்தம்தான். பவுண்டரி அடிப்பதில் வறட்சி நிலவியது, இந்திய பேட்ஸ்மேன்களால் சிங்கிள்ஸ் கூட எடுக்கமுடியவில்லை. இதுபோன்ற நேரங்களில் நீங்கள் பழக்கமில்லாத சில விஷயங்களை விளையாட முயற்சி செய்வீர்கள். இந்த விஷயத்தில் இந்திய வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

270 ரன்கள் இலக்கை துரத்தும் போது 90 அல்லது 100 ரன்களுக்கு மேல் சேர்க்கக்கூடிய வகையில் பார்ட்னஷிப் தேவை. அதுதான் வெற்றிக்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும். ஆனால் இந்திய அணியின் பேட்டிங்கின் போது அது நிகழவில்லை. விராட் கோலி, கே.எல்.ராகுல் இடையே பார்ட்னர்ஷிப் இருந்தது.

ஆனால் அதன் பின்னர் இதே போன்றோ அல்லது அதைவிட பெரிதோ பார்ட்னர்ஷிப் விரும்பிய வகையில் அமையவில்லை. ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் அற்புதமாக இருந்தது. பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. நெருக்கமாக, ஸ்டெம்புகளுக்கு நேராக வீசினர். இதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

SCROLL FOR NEXT