2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் அனைத்தையும் இந்தியா முதன்முறையாக தனித்தே நடத்துகின்றது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011 உலகக் கோப்பைப் போட்டிகளை இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்துடன் சேர்ந்து நடத்தியது இந்தியா. இப்போது தனித்து நடத்துவதால் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையை வெல்வது சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. அதே நேரத்தில் ரோகித் சர்மா கேப்டனாக சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதில் ஆர்வமாக இருப்பார்கள் இந்திய அணியினர். பத்தாண்டு கால ஐசிசி நடத்தும் தொடர்களை வெல்ல முடியாமல் நீடித்து வரும் கோப்பை வறட்சியை முடிவுக்கு கொண்டு வர இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள்.
2011 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால், இந்தியாவிடம் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கோப்பையை வெல்லும் சாதகமான அணிகளில் இந்தியா இருந்தாலும், பாகிஸ்தானையும் நாம் வெறுமனே அந்த ரேஸில் இருந்து தள்ளி வைக்க முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
“ஆம்! இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு அணிகளும் பிரமாதமான அணிகள். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஒரு கிரேட் பிளேயர். மேலும் உலகிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடமே உள்ளனர். ஷாஹின் அஃப்ரிடி இப்போது பெரிய ஃபார்மில் இருக்கின்றார். அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் தன் அணியை 2வது முறையாக தொடரை வெல்ல இட்டுச் சென்றுள்ளார்.
மேலும் ஷாஹின் அஃப்ரிடி ஒரு ஆல் ரவுண்டராகவும் வளர்ந்து வருகிறார். இவரோடு ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், உத்வேகமான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஈசானுல்லா என இந்தியப் பிட்ச்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் பவுலிங் அட்டகாசமாக உள்ளது. வலுவாக உள்ளது” என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், அதிரடி இங்கிலாந்துதான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். அதாவது இங்கிலாந்து அணியில் நல்ல ஸ்பின்னர்கள் இருப்பதோடு, ஸ்பின் பவுலிங்கையும் அடித்து நொறுக்கும் பேட்டர்கள் இருக்கின்றனர். ஜோப்ரா ஆர்ச்சர் காயத்திலிருந்து மீண்டு வந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.
மார்க் உட் 90 மைல் வேகத்தில் வீசுகின்றார். ஆகவே இங்கிலாந்திடம் அனுபவம் உள்ளது. ஆனால், இந்திய அணி ஓர் அச்சுறுத்தலான அணிதான். இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடினால் தங்கள் மண்ணில் அவர்கள் ஒரு பெரிய சக்திதான் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். கடந்த 2011, 2015 மற்றும் 2019 என மூன்று ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களை நடத்திய அணிகள்தான் வென்றுள்ளன. அதை வைத்து பார்க்கும் போதும் இந்திய அணி இந்த முறை உலகக் கோப்பையை மீண்டும் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.