விளையாட்டு

உங்கள் சுயசரிதை நூல் மிகப்பெரிய உத்வேகமளித்தது: சச்சினுக்கு 12 வயது சிறுவன் நெகிழ்ச்சிக் கடிதம்

இரா.முத்துக்குமார்

கான்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன், பாட்மிண்டன் வீரனான ஸ்ரீஹரி கட்டி என்பவர் சச்சின் சுயசரிதை நூலைப் படித்து அகத்தூண்டுதலும், உத்வேகமும் பெற்றதாக சச்சினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர், அவருக்கு, “உன்னுடைய அன்பான கடிதத்துக்கு நன்றி ஸ்ரீஹரி! நீ பாட்மிண்டன் விளையாடுவதை அறிந்து மகிழ்கிறேன். எப்போதும் கடினமாக உழை, என்னுடைய வாழ்த்துக்கள்” என்று அவருக்கு மேலும் உற்சாகமூட்டியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஸ்ரீஹரி கூறியிருப்பதாவது:

நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி. ஆனால் நான் கிரிக்கெட் ஆட்டத்தின் விசிறி அல்ல. நான் உங்கள் சுயசரிதை நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமாகவும் மிகப்பெரிய அளவில் உத்வேகமூட்டக்கூடியதாகவும் இருந்தது. நான் பாட்மிண்டன் ஆடி வருகிறேன். உங்கள் வாழ்க்கை வரலாற்றை படிக்கும் போது தவறுகளைத் திருத்திக் கொள்வது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டேன்.

என்னிட இத்தகைய குணங்களை ஏற்படுத்தியதற்காக நான் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நீங்கள் ஆடுவதை பார்க்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. நீங்கள் இந்த நாட்டுக்கும் எங்களுக்கும் பெருமை சேர்த்தது குறித்து நான் பாராட்டு தெரிவிக்கிறேன். அஞ்சலி மேடத்திற்கு என் மரியாதைகள்.

இவ்வாறு அந்தத் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT