மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனின் 9-வது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை துவம்சம் செய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. பவுலிங், பேட்டிங் என அனைத்திலும் குஜராத் அணியை வெளுத்து வாங்கியது டெல்லி. டெல்லி அணிக்காக ஷபாலி வர்மா, 28 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். 10 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 271.43.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி பவர்பிளே ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதுவும் முதல் 28 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது அந்த அணி. இருந்தும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்களை எடுத்தது குஜராத்.
டெல்லி அணிக்காக பந்து வீசிய மரிசேன் கேப், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஷிகா பாண்டே, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ராதா யாதவ், ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி விரட்டியது. அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மா இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்களை எடுத்தது டெல்லி. அதன் மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மரிசேன் கேப், பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார்.