அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 191 ரன்கள் முதல் இன்னிங்ஸில் பின்தங்கி உள்ளது இந்தியா. கோலி இந்த இன்னிங்ஸில் அரைசதம் பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. 36 ரன்கள் உடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கியது இந்தியா. ரோகித் - கில் இடையே 74 ரன்களுக்கு கூட்டணி அமைந்தது. ரோகித், 35 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து கில் மற்றும் புஜாரா 113 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த கோலி உடன் 58 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கில். 235 பந்துகளில் 128 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை அவர் இழந்தார். பின்னர் வந்த ஜடேஜாவுடன் இணைந்து நிதானமாக ஆடி வருகிறார் கோலி. 2022 ஜனவரிக்கு பிறகு கோலி இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் பதிவு செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த அரைசதம் பதிவு செய்யப்பட்டது.
அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 4000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இதன் மூலம் சச்சின், திராவிட், கவாஸ்கர் மற்றும் சேவாக் வரிசையில் அவர் இணைந்துள்ளார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஜடேஜா 16 ரன்கள் மற்றும் கோலி 59 ரன்களுடன் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளனர். இந்தப் போட்டியில் இதுவரை நடந்து 9 செஷன்களில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா 3 செஷனில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. 3 செஷனை இரு அணிகளுக்கு பகிர்ந்து கொண்டுள்ளன. நாளைய ஆட்டத்தில் எந்த அணி ஆதிக்கம் செலுத்துகிறதோ அதை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கும்.