கோப்புப்படம் 
விளையாட்டு

IPL 2023 | CSK vs GT: முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவக்கம்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: எதிர்வரும் ஐபிஎல் சீசனின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இதனை குஜராத் டைட்டன்ஸ் அணி சமூக வலைதள பதிவின் வழியே அறிவித்துள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி வரும் 31-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மைதானத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி போட்டியை பார்க்க முடியும். முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுகின்ற காரணத்தால் இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

“குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் 2023 சீசனுக்கான முதல் போட்டி டிக்கெட் விற்பனையை துவங்கி உள்ளது. வரும் 31-ம் தேதி முதல் நடப்பு ஐபிஎல் சாம்பியனான குஜராத் அணி 7 போட்டிகளில் சொந்த மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுகிறது. மாலை 6 மணி முதல் (மார்ச் 10) முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்குகிறது” என குஜராத் அணி ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலைதளம், பேடிஎம் டிக்கெட்ஸ் மற்றும் டைட்டன்ஸ் FAM செயலி வழியே ரசிகர்கள் டிக்கெட் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT