மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் தினேஷ் கார்த்திக்கை போல அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்துக் கொடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல். 20 வயதான ஆல் ரவுண்டரான அவர், அதற்காக வேண்டி டிகேவை போலவே ரேம்ப் ஷாட் ஆடி பயிற்சி எடுத்து வருகிறாராம்.
“டிகே பாணியில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க நான் விரும்புகிறேன். இதை நான் எனது சக அணியினரிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதற்கான வாய்ப்பு எனக்கு அமைய வேண்டும். அது நடந்தால் நிச்சயம் நான் டிகேவை போல ஆடுவேன். அவரது ஷாட்களை பிரதி எடுத்து நான் பயிற்சி செய்து வருகிறேன். அழுத்தம் மிகுந்த நேரத்தில் விளையாட நான் அதிகம் விரும்புவேன். கிரேஸ் ஹாரிஸின் ஆட்டம் அபாரமாக இருந்தது. எனக்கு பிடித்தது” என ஸ்ரேயங்கா தெரிவித்துள்ளார்.
கடந்த 8-ம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4 பந்துகளில் 11 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை ஸ்ரேயங்கா கைப்பற்றி இருந்தார். அதையடுத்து ட்விட்டர் தளத்தில் அவரை வாழ்த்தி இருந்தார் தினேஷ் கார்த்திக். இந்திய அணியில் அவர் இடம்பிடிப்பார் என தான் நினைப்பதாகவும் அதில் டிகே சொல்லி இருந்தார். இந்தப் போட்டியில் 202 ரன்களை விரட்டி 190 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு. அதற்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார்.
“அந்த ட்வீட்டை நான் பார்க்கும்போது. இதைவிட வேறென்ன நான் கேட்க முடியும். இதுவே எனக்கு போதும் என நான் எண்ணினேன்” என ஸ்ரேயங்கா தெரிவித்துள்ளார். இன்று யூபி வாரியர்ஸ் அணியுடன் பெங்களூர் அணி விளையாடுகிறது.