அகமதாபாத்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவு பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. கவாஜா 180 ரன்கள், கிரீன் 114 ரன்கள் எடுத்திருந்தனர். இந்த இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்த நிலையில் தொடங்கியது ஆஸ்திரேலியா. கவாஜா மற்றும் கிரீன் இணையர் வலுவான கூட்டணி அமைத்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனதும். இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் எஞ்சியிருந்த 10 ஓவர்களை விளையாடியது.
இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் கண்டனர். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 36 ரன்கள் எடுத்தது. ரோகித் 17 ரன்கள், கில் 18 ரன்கள் எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தற்போது 444 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இரண்டாம் நாளின் கடைசி ஓவரில் கில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்திருந்தார். அதனால் பந்து மைதானத்தின் மேற்கூரை பகுதியில் இருந்த வெள்ளை நிற திரைச்சீலைக்குள் மறைந்தது. அதை ரசிகர் ஒருவர் தேடி எடுக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்குள் களத்தில் பந்தை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக அந்த ரசிகர் பந்தை தேடி கண்டுபிடித்து மைதானத்திற்குள் தூக்கி வீசினார். அதைக் கொண்டே அந்த ஓவர் வீசப்பட்டது. பொதுவாக கல்லி கிரிக்கெட்டில்தான் இது போல பந்து மாயமாகும். அதை தேடும் கிரிக்கெட் ஆர்வலர்கள் பிஸியாக இருப்பார்கள். அந்தக் காட்சி அப்படியே இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நடந்திருந்தது.