ஆஸ்திரேலிய வீரர்கள் 
விளையாட்டு

IND vs AUS | கம்மின்ஸின் தாயார் மறைவு: கருப்பு பட்டை அணிந்து விளையாடிய ஆஸி. அணியினர்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: கம்மின்ஸின் தாயார் மறைவை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து இந்திய அணிக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் உடல்நல குறைபாடு காரணமாக காலமானார். அவருக்கு நெடுநாட்களாக உடல்நல பாதிப்பு இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் தனது தாயாரின் உடல்நலக் குறைபாடு காரணமாக கம்மின்ஸ் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். மரியாவுக்கு 2005-ல் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்.

இந்நிலையில், கம்மின்ஸின் தாயார் உயிரிழந்தார். “மரியா கம்மின்ஸின் மறைவை அறிந்து நாங்கள் வருந்துகிறோம். கிரிக்கெட் ஆஸ்திரேலியா சார்பாக பேட் கம்மின்ஸ், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுவர்” என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இந்த இன்னிங்ஸில் கவாஜா 180 ரன்கள் மற்றும் கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

SCROLL FOR NEXT