மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் யூபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் கிரண் நவ்கிரே. இவர் இந்த சீசனில் பயன்படுத்தும் பேட்டில் 'MSD 07' என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் மற்றும் அவரது ஜெர்ஸி எண்ணை குறிப்பிடும் வகையில் உள்ளது. அதை வைத்து பார்த்தால் அவரும் தோனியின் கோடான கோடி ரசிகர்களில் ஒருவராக இருப்பார் எனத் தெரிகிறது.
நேற்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்தார் அவர். இதில் 5 பவுண்டரி மாறும் 2 சிக்ஸர்கள் அடங்கும். கிரேஸ் ஹாரிஸ் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் கூட்டணி வாரியர்ஸ் அணியை வெற்றி பெற செய்தது.
இந்தப் போட்டியில் கிரண் பேட் செய்த போது அவரது பேட்டில் 'MSD 07' என தோனியின் பெயர் மற்றும் ஜெர்ஸி எண் பொறிக்கப்பட்டு இருந்தது பெரும்பாலான பார்வையாளர்களின் கவனத்தை பெற்றது. அது சமூக வலைதளத்திலும் பரவலாக பகிரப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் பகுதியை சேர்ந்தவர் கிரண். 28 வயதான அவர் இந்திய அணிக்காக 6 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவரை வாரியர்ஸ் அணி சுமார் 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. டி20 போட்டியின் ஒரே இன்னிங்ஸில் 150+ ரன்களை எடுத்த இந்திய வீராங்கனை அவர் மட்டுமே. 2021-22 மகளிர் சீனியர் டி20 கோப்பை தொடரில் 76 பந்துகளில் 162 ரன்களை அவர் எடுத்திருந்தார். 16 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.