விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் டி20 | குஜராத் அணிக்கு ஆட்டம் காண்பித்த மும்பை இந்தியன்ஸ் - 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

செய்திப்பிரிவு

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நேற்று கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஹர்மான்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியை கையாண்டது. முதல் போட்டிக்கு ஏற்ப வான வேடிக்கை நிகழ்த்தினர் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது அந்த அணி.

பேட்டிங்கில் மட்டுமல்ல, பவுலிங்கிலும் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியை தனது கட்டுக்குள் கொண்டுவந்தது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடர் விக்கெட் சரிவை சந்தித்த குஜராத் அணி ஒருகட்டத்தில் 64 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.

தயாளன் ஹேமலதா மற்றும் கடைசி கட்டத்தில் இறங்கிய மோனிகா படேலை தவிர அந்தணியில் எந்த வீராங்கனையும் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை. 4 பேர் டக் அவுட் ஆனது பெரும் சோகமாக அமைந்தது. 23 ரன்கள்குள்ளாகவே 7 விக்கெட்டுகளை இழந்தது. ஹேமலதா 29 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை சைகா இஷாக் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தி குஜராத் அணியின் சரிவுக்கு காரணமாக இருந்தார். நட் சிவர் பிரண்ட், அமீலியா கெர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

SCROLL FOR NEXT