ராவல்பிண்டி: நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற லீக் போட்டியில் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசி உள்ளார் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய அசம் கான். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பெற செய்துள்ளார் அவர்.
இந்த லீக் தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த கராச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இஸ்லாமாபாத் அணி விரட்டியது.
7.2 ஓவர்கள் முடிவில் 69 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இஸ்லாமாபாத். அப்போது பேட் செய்ய வந்தார் அசம் கான். ஃபஹீம் அஷ்ரப் உடன் இணைந்து 125 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதோடு 41 பந்துகளில் 72 ரன்களை எடுத்திருந்தார் அவர். இதில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிவரை அவர் அவுட் ஆகாமல் அணியை வெற்றி பெற செய்தார். அந்த அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.
24 வயதான அசம் கான், பாகிஸ்தான் அணிக்காக 3 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கானின் மகன் ஆவார். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 97 ரன்களை அவர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.