இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி 
விளையாட்டு

IND vs AUS 3-வது டெஸ்ட் | 2-வது இன்னிங்ஸில் இந்தியா ஆல் அவுட்; ஆஸி.க்கு 76 ரன்கள் இலக்கு

செய்திப்பிரிவு

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் மட்டுமே தேவை. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணிக்காக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி களத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார் லயன். மறுபக்கம் புஜாரா, நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 109 ரன்களும், ஆஸ்திரேலியா 197 ரன்களும் எடுத்தன. 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்த இன்னிங்ஸில் இந்தியா பெரிய ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிய இந்திய பேட்ஸ்மேன்கள்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் தடுமாறினர். கில், ரோகித், கோலி, ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர், பரத், அஸ்வின், புஜாரா, உமேஷ் யாதவ், சிராஜ் என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இதில் புஜராவும், ஸ்ரேயஸ் ஐயரும் இணைந்து 35 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதுவே இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. மற்றபடி சின்ன சின்ன பார்ட்னர்ஷிப் அமைந்தது. அது பலன் கொடுக்கும் நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

புஜாரா: இந்த இன்னிங்ஸில் இந்திய அணிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் புஜாராவின் பேட்டிங்தான். 142 பந்துகளை எதிர்கொண்ட அவர் 59 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் இதில் அடங்கும்.

களத்தில் கர்ஜித்த லயன்: ஆஸ்திரேலிய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன், இரண்டாவது இன்னிங்ஸில் 23.3 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் விக்கெட்டை தவிர்த்து மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி இருந்தார். இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து இந்தப் போட்டியில் 11 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.

முதல் இரண்டு நாட்களில் 30 விக்கெட்டுகள்: இந்தூர் டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் மூன்று இன்னிங்ஸ் ஆடப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாட்களில் மொத்தமாக 30 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. அதில் 25 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி உள்ளனர். 4 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சுக்கும், ஒரு ரன் அவுட்டும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 76 ரன்கள் தேவை. இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாளான நாளைய தினம் சுலபமாக எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT