கராச்சி: இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்தை அதிகம் மிஸ் செய்து வருவதாவும், அவர் இருந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் நேதன் லயன், மேத்யூ குனேமனை பொளந்து கட்டி இருப்பார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வருகின்றனர். இதனால் இந்திய அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்து வருகிறது. இந்த சூழலில் கனேரியா இதை சொல்லியுள்ளார். கடந்த டிசம்பரில் பந்த் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த ஸ்பின்னர்களை எப்படி சமாளிப்பது அல்லது ஆடுவது என ரிஷப் பந்த் இடம் நீங்கள் கேட்டால், பந்து பிடிக்க ஆகும் இடத்திற்கு இறங்கி வந்து அதை நீண்ட தூரம் போகும் அளவுக்கு விளாச வேண்டும் என அவர் சொல்லி இருப்பார். அவர் மட்டும் இருந்திருந்தால் லயனையும், குனேமனையும் விட்டு வைத்திருக்கமாட்டார். நிச்சயம் அதிரடி பாணியில் ஆடி அவர்களது லைன் மற்றும் லெந்த்தை மாற்ற தனது பேட்டிங் திறன் மூலம் வலியுறுத்தி இருப்பார். ஆனால், மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்காமல் ஏமாற்றம் தருகின்றனர்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முறையாக விளையாடி 250 முதல் 300 ரன்கள் வரை எடுத்திருந்தால் நிச்சயம் இந்தப் போட்டியில் வென்றிருக்கும். ஆனால், மோசமான ஷாட் தேர்வு காரணமாக விரைந்து விக்கெட்டை இழந்தனர். இப்போது இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்” என கனேரியா தெரிவித்துள்ளார்.