ஜடேஜாவைத் தள்ளிவிட்ட புகார் மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய ஆட்ட முடிவில் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்திய வீரர் ரஹானேயை நோக்கி சில வசைகளைப் பிரயோகித்தார்.
ரஹானே பதிலுக்கு கோபமாக ஏதோ பேச, நடுவர் ராட் டக்கர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.
கடைசி பந்தை ஆண்டர்சன் வீசி முடித்து அனைவரும் பெவிலியன் செல்லத் தயாரான போது ஆண்டர்சன் ரஹானேயை நோக்கி சில வார்த்தைகளைப் பிரயோகித்தார்.
உடனே ரஹானேயும் கோபமாக ஏதோ பேசினார். ஆனால் நடுவர் தலையிட பிரச்சினை முடிந்தது. ஆனாலும் ஆண்டர்சனின் இந்த நடத்தை நாளை அவருக்கு எதிரான புகாரில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மாவுக்கு வீசிய ஒரு பந்தை அவர் அடிக்க அது ஆண்டர்சனிடம் கேட்ச் பிடிக்கும் உயரத்தில் வந்தது ஆனால் ஆண்டர்சன் கேட்சைக் கோட்டைவிட்டார். இதே போன்ற கேட்சை அவர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ரஹானேயிற்குப் பிடித்தார். நேற்று கோட்டைவிட்டதில் அவர் பெரும் ஏமாற்றமடைந்தார்.
அதற்கு அடுத்த ஓவரை பாலன்ஸ் வீசினார். பிறகு கடைசி ஒவரை ஆண்டர்சன் வீசி முடித்த பிறகே மேற்கூறிய வசைச் சம்பவம் நிகழ்ந்தது. ரஹானேயிற்கு பெவிலியன் செல்லும் வழியை கேலியாகக் காண்பித்தார் ஆண்டர்சன் என்று கூறப்படுகிறது.