பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் அபார வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனை முழுவதும் மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
29 வயதான பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் பிரதானமான வீரர். இவரது யார்க்கர்கள் எதிரணி வீரர்களின் திணற செய்யும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டிலும் விளையாடி வரும் வீரர். ஐபிஎல் அரங்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்தச் சூழலில் கடந்த ஆண்டு அவருக்கு காயம் ஏற்பட்டது. அது முதலே அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது இல்லை. இடையில் கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை அவர் மிஸ் செய்தார்.
இந்நிலையில், அவர் எதிர்வரும் ஐபிஎல் சீசன் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை (இந்திய அணி தகுதி பெற்றால்) மிஸ் செய்வார் என்று தெரிகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் எனத் தெரிகிறது.
அவர் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட போதுமான உடல் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். அதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள பிசிசிஐ மருத்துவர் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.