விளையாட்டு

‘உலக இரும்பு மனிதர்’ போட்டியில் குமரி வீரர் கண்ணன் 2-ம் இடம் பிடித்து வெள்ளி வென்று சாதனை சாதனை

எல்.மோகன்

நாகர்கோவில்: உலக இரும்பு மனிதர் போட்டியில் 85 கிலோ எடை பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் அசத்தியுள்ளார். அவர் 2-ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாமரை குட்டிவிளையைச் சேர்ந்தவர் கண்ணன் (40). உடற்கல்வி பயிற்சியாளரான இவர் ஏற்கெனவே இந்தியாவின் இரும்பு மனிதர் எனும் பட்டத்தைப் பெற்றவர். சமீபத்தில் நாகர்கோவிலில் 9.5 டன் லாரியை கயிற்றால் இழுத்தும், 370 கிலோ எடையுள்ள இஞ்சின் இல்லாத காரை தூக்கியும், நாகர்கோவிலில் நடந்த சர்க்கஸில் பார்வையாளராக இருந்தபோது தென் ஆப்பிரிக்க வீரரின் சவாலை ஏற்று 85 கிலோ எடையுள்ள குண்டை கையால் தூக்கி அந்த சவாலை முறியடித்தார்.

இந்நிலையில், உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுப் போட்டிகளில் ‘ஸ்ட்ராங் மேன்’ போட்டியில் பங்கேற்க இவர், தீவிர பயிற்சி பெற்று வந்தார். இந்தப் போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைக்க வேண்டும். இந்த ஆண்டிற்கான உலக இரும்பு மனிதர் போட்டிகள் முதல்முறையாக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில், 85 கிலோ எடைப்பிரிவு போட்டியில் கண்ணன் கலந்துகொண்டார். இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் லாக் பிரஸ், யோக் வாக், டயர் பிலிப் மற்றும் ஸ்டோன் என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், முதல் இடத்தை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரர் குர்தீப்சிங் (38) பெற்ற நிலையில், இரண்டாம் இடத்தை கண்ணன் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே கண்ணன் பல்வேறு சாதனைகள் படைத்து இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்ற நிலையில், தற்போது உலக இரும்பு மனிதர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு உலக அளவில் இரும்பு மனிதர் போட்டிகளை நடத்தும் அமைப்பினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT