மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை கேப்டன் பதவி தேவையில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தத் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் கே.எல்.ராகுல் அதிக ரன்களைக் குவிக்காமல் ஆட்டமிழந்து வருகிறார். அவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேற்று கூறியதாவது:
இந்திய அணிக்கு துணை கேப்டனை நியமிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து அணி நிர்வாகம்தான் முடிவெடுக்கும். ஆனால் என்னைக் கேட்டால் இந்திய அணிக்கு துணை கேப்டன் பதவியே வேண்டாம் என்றுதான் தெரிவிப்பேன். இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு தரலாம். இவ்வாறு அவர் கூறினார்.