ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் 
விளையாட்டு

WT20 WC | 6-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

செய்திப்பிரிவு

கேப் டவுன்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 6-வது முறையாக ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 53 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தார் அந்த அணியின் பெத் மூனி.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா விரட்டியது. இருந்தும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது அந்த அணி. நான்காவது விக்கெட்டுக்கு லாரா வோல்வார்ட், ட்ரையான் இணைந்து 55 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது மட்டுமே அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது. இருந்தும் அந்த கூட்டணியை ஆஸ்திரேலிய பவுலர்கள் தகர்த்தனர். அதன் பின்னர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது அந்த அணி.

ஆஸி. ஆதிக்கம்: 2010, 2012, 2014, 2018, 2020, 2023 என ஆறு முறை ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. அதே போல அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங், 5 முறை ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் உலகில் ஐசிசி கோப்பைகளை அதிக முறை வென்ற கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், 4 முறை ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 3 முறை ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT