விளையாட்டு

IND vs AUS | 3-வது டெஸ்டில் இருந்து பாட் கம்மின்ஸ் விலகல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருகிறது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ம் தேதி இந்தூரில் தொடங்க உள்ளது.

இதற்கிடையே டெல்லியில் முடிவடைந்த 2-வது போட்டிக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அவசரமாக சிட்னி திரும்பினார். அவரது,தாயார் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பாட் கம்மின்ஸ் குடும்பத்தினருடன் உள்ளார். இதற்கிடையே3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பாட் கம்மின்ஸ் கூறும்போது, “எனது தாய் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவர், நோய்த்தடுப்பு சிகிச்சையில் உள்ளதால், இந்த நேரத்தில்நான் இந்தியாவுக்குத் திரும்பி செல்வதில்லை என முடிவு செய்துள்ளேன். எனது குடும்பத்துடன் இருப்பதை சிறந்ததாக உணர்கிறேன். கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் எனது அணி வீரர்களிடம் இருந்து எனக்கு சிறப்பான ஆதரவு கிடைத்தது. உங்கள் புரிதலுக்கு நன்றி” என்றார்.

இதனால் பாட் கம்மின்ஸ் 3-வதுடெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவது உறுதியாகி உள்ளது. இந்தூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என தெரிகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக பாட் கம்மின்ஸ் மார்ச் 9-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்பது சந்தேகம்தான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT