ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தை இந்திய அணி நிர்வாகம் ஊதிப்பெருக்குகிறது என்று இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் சாடியுள்ளார்.
மேலும், சிறந்த பந்து வீச்சாளரான ஆண்டர்சனை ஓரிரு போட்டிகளில் விளையாட விடாமல் செய்ய இந்தியா தந்திரம் செய்கிறது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
நாளை 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த அலிஸ்டர் குக் இந்த விவகாரம் குறித்துக் கூறியிருப்பதாவது:
"ஆண்டர்சனைத் தடை செய்ய இந்திய அணி நிர்வாகம் சிறிய விஷயத்தை ஊதிப்பெருக்கியுள்ளது. இது இந்திய அணியின் தந்திரமாகக் கூட இருக்கலாம்.
இந்த விவகாரம் இவ்வளவு தூரம் சென்றது பற்றி ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இது எங்கள் அணியின் கவனத்தைச் சிதறடிக்கப்போவதில்லை.
ஆண்டர்சன் எங்கள் அணியின் போராளி, அவருக்கு எங்கள் ஆதரவு முழுதும் உண்டு. இந்த விஷயம் அவரை உத்வேகப்படுத்தினால் நல்லது. இங்கிலாந்து அணிக்கு அதைத் தவிர வேறு என்ன வேண்டும்? என்று கூறிய அலிஸ்டர் குக், ஆண்டர்சன் தன்னிடத்தில் இது பற்றி கூறிய தகவல்களைத் தான் முழுமையாக நம்புவதாகவும், விவகாரம் விசாரணைக்குச் சென்றதால் ஆண்டர்சன் கூறியதைத் தான் தெரிவிக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.