விளையாட்டு

இந்தியா - பாக். வாரிய அதிகாரிகள் 29-ம் தேதி துபையில் ஆலோசனை

ஏஎன்ஐ

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் வரும் 29-ம் தேதி துபையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே 2015 முதல் 2023 வரையிலான காலக்கட்டம் வரை 6 முறை இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்துவது என கடந்த 2014-ம் ஆண்டு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புரிந்துணர்வு ஒப்பந்தப்படி பாகிஸ்தானுடன் இந்தியா மொத்தம் 6 கிரிக்கெட் தொடர்களை விளையாட வேண்டும். இதில் 4 தொடர்கள் பாகிஸ்தானில் நடை பெறவிருந்தன. ஆனால் பாகிஸ் தான் தீவிரவாதிகள் எல்லை தாண்டி தாக்குதல்கள் நடத்தி வருவதால் இருதரப்பு கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்கவில்லை, ஒப்பந்தப்படி கிரிக்கெட் தொடர் நடைபெறாத தால், கிட்டத்தட்ட 449 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாகவும், அதற் குரிய நஷ்ட ஈட்டைத் தர வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த மாத தொடக்கத்தில் பிசிசிஐ-க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் (பொறுப்பு) அமிதாப் சவுத்ரி கூறும்போது, “புரிந்துணர்வு ஒப்பந்தமானது கடந்த 2014-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. இதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை வரும் 29-ம் துபையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்” என்றார்.

அமிதாப் சவுத்ரியுடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் குழுவும் கலந்து கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கானை சந்தித்து பேச உள்ளது.

SCROLL FOR NEXT