கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 
விளையாட்டு

WT20 WC அரையிறுதி | கடின இலக்கை விரட்டிப் பிடிக்க முயன்ற இந்தியா - ஆஸி. வெற்றி!

செய்திப்பிரிவு

கேப் டவுன்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. இருந்தும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது. ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

அதிரடியாக தொடங்குகிறோம் என ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா என இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். யாஸ்திகா பாத்தியா, 4 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத், ஜெமிமாவுடன் அபார கூட்டணி அமைத்தார். இருவரும் 69 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஜெமிமா வெளியேறினார். தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் உடன் 35 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஹர்மன்பிரீத். 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்பிரீத், ரன் அவுட் ஆனார். தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ரிச்சா கோஷ், பெரிய ஷாட் ஆட முயன்று 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி நான்கு ஓவர்களில் 38 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இருந்தும் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

SCROLL FOR NEXT