விளையாட்டு

அரசு உத்தரவை கண்டுகொள்ளாத 7 கூட்டமைப்புகள்

செய்திப்பிரிவு

இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளின் படி 7 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் செயல்படவில்லை என்ற தகவலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் தலைவர் பதவியில் 70 வயதுக்கு மேற்பட்டவர் இருக்கக் கூடாது என்று இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதி திருத்தப்பட்டது.

ஒருவரே தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளும் இதனை கடைப்பிடிக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தவிட்டது.

ஆனால் மொத்தமுள்ள 54 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளில் 47 அமைப்புகள் மட்டுமே தலைவரின் வயது தொடர்பான தங்கள் விதியை திருத்தி அமைத்துக் கொண்டன.

இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு, இந்திய ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு, இந்தியன் கோல்ட் யூனியன், இந்திய ஜம்ப் ரோப் கூட்டமைப்பு, இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு, சூட்டிங் பால் கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு ஆகிய 7 அமைப்புகள் அந்த உத்தரவை செயல்படுத்தவில்லை.

தங்கள் விதிகளை முறைப்படி மாற்றி அமைத்துக் கொள்ள இந்த 7 அமைப்புகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. என்று அமைச்சர் சோனோவால் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT