துபாய்: WTA துபாய் டூட்டி ஃப்ரீ சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் 4-6, 0-6 என நேர் செட் கணக்கில் ஆட்டத்தை அமெரிக்க இணையருடன் சேர்ந்து இழந்துள்ளார் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இது டென்னிஸ் களத்தில் அவர் விளையாடும் கடைசி போட்டியாகும்.
இந்தியாவைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் ஒற்றையர் பிரிவில் மிகவும் பிஸியாக கிராண்ட் ஸ்லாம் உட்பட பல்வேறு சர்வதேச டென்னிஸ் தொடர்களில் விளையாடி வந்தார். அதன் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டு இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
2013-ல் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா 3 என மொத்தம் 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியாவின் உச்ச டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவர். இப்படி பல சாதனைகளை படைத்து நாட்டுக்குப் பெருமை சேர்த்த அவர் கடந்த ஆண்டு ஓய்வு குறித்து பகிரங்கமாக பேசி இருந்தார். இதுவே தனது கடைசி சீசன் என்றும் அப்போது சொல்லியிருந்தார்.
அதன்படியே இந்த சீசனில் நடைபெற்ற பல்வேறு தொடர்களில் அவர் விளையாடி இருந்தார். கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா இணையர் விளையாடி இருந்தனர். அந்தப் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தனர். அதுவே அவரது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியாக அமைந்தது.
இந்நிலையில், துபாயில் நடைபெற்று வரும் WTA துபாய் டூட்டி ஃப்ரீ சாம்பியன்ஷிப் தொடர் சானியா பங்கேற்று விளையாடும் கடைசி தொடர் என அறிவிக்கப்பட்டது. அதன்படியே தற்போது டென்னிஸ் விளையாட்டுக்கு ஒரு வீராங்கனையாக விடை கொடுத்துள்ளார். எதிர்வரும் மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணியின் ஆலோசகராக அவர் செயல்பட உள்ளார்.