சென்னை: தனது அம்மாதான் தனது ஹீரோ என இந்திய கால்பந்தாட்ட அணியின் வீராங்கனை சந்தியா ரங்கநாதன் ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற நேபாளம் மற்றும் இந்திய அணிக்கு இடையிலான போட்டியை அவரது அம்மா பார்த்திருந்தார். அவரது இந்தப் பதிவு மிகவும் நெகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் தனது அம்மாவின் உறுதுணை மற்றும் அவரது வாழ்வு குறித்து சந்தியா பகிர்ந்துள்ளார்.
“இன்று நான் இந்த நிலையை எட்ட எனது அம்மாதான் காரணம். தனி ஒருவராக இரண்டு மகள்களை வளர்த்தெடுத்தார். அம்மாவுக்கு வாழ்க்கை எளிதானதாக அமையவில்லை. ஆனால், எங்களுக்கான சிறந்த வாழ்வை அமைத்துக் கொடுப்பதில் உறுதியாக இருந்தார். என்னை ஆதரிக்கும் நம்பிக்கைத் தூண். நாட்டுக்காக நான் ஆடுவதை என அம்மா பார்ப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். என் அம்மா என் ஹீரோ” என தெரிவித்துள்ளார்.
26 வயதான சந்தியா, தமிழகத்தின் பண்ருட்டியில் பிறந்தவர். முன்கள வீராங்கனை. இந்திய அணிக்காக கடந்த 2018 முதல் விளையாடி வருகிறார். 7 சர்வதேச கோல்களை பதிவு செய்துள்ளார். 2016 முதல் சீனியர் பிரிவில் பல்வேறு கால்பந்தாட்ட கிளப் அணிகளில் விளையாடி வருகிறார். தற்போது கோகுலம் கேரள அணியில் உள்ளார். 2018-19 இந்திய மகளிர் லீக் சீசனில் Most Valuable பிளேயர் விருதை வென்றவர்.