புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அவசரமாக தாயகம் சென்றுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், குடும்ப காரணங்களுக்காக சிட்னி சென்றுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தூர், அகமதாபாத்தில் நடைபெற உள்ள கடைசி இரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க பாட் கம்மின்ஸ் திரும்பி வருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ம் தேதி இந்தூரிலும், கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் 9-ம் தேதியும் நடைபெறுகிறது. - பிடிஐ