போர்ட் எலிசபெத்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை DLS முறையின் கீழ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய மகளிர் அணி. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 26-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. குரூப் மற்றும் நாக்-அவுட் என 23 போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த தொடரில் இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. முதல் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா வீழ்த்தியது. கடந்த சனிக்கிழமை அன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது.
இந்த சூழலில் இன்று (பிப்.20) அயர்லாந்து அணியுடன் இந்தியா விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது இந்தியா. ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி 56 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அயர்லாந்து விரட்டியது. முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி.
இருந்தும் அந்த 8.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 54 ரன்களை எட்டி இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. அதனால் DLS முறையில் ஆட்டத்தின் முடிவு எடுக்கப்பட்டது. அதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றான நாக்-அவுட்டுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
வரும் 23-ம் தேதி கேப் டவுன் நகரில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.