சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமகனான மகேரந்திர சிங் தோனி முதன்முதலில் சென்னை அணியில் இணைந்தார். முதல் சீசனுக்கான ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக தோனி அறியப்படுகிறார். அவரை சென்னை அணி அப்போது வாங்கியது.
2008-இல் இதே நாளில் தொடங்கிய இந்தப் பயணம் இத்தனை ஆண்டுகளை கடந்தும் அதே அளவில்லாத அன்புடன் நீடித்து வருகிறது. ராஞ்சி, தோனியின் தாய் வீடு என்றால் சென்னை அவரது இரண்டாவது தாய் வீடு என்று சொல்லலாம். அந்த அளவுக்கு கிரிக்கெட் மூலம் உன்னதமான உறவை இந்த மண்ணின் மக்களோடு உருவாக்கி வைத்துள்ளார்.
4 முறை ஐபிஎல் சாம்பியன், 2 சாம்பியன்ஸ் லீக், 11 ஐபிஎல் சீசனில் பிளே ஆப் சுற்று, கேப்டனாக அதிக வெற்றி, 4853 ரன்கள் குவித்துள்ளார் தோனி. சென்னை தனது இரண்டாவது தாய் வீடு என தோனியே சொல்லியுள்ளார்.
கரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சொந்த மண்ணான சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் சென்னை அணி அதீத பலத்துடன் திகழும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மற்ற ஐபிஎல் அணிகளை எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தோனியின் கடைசி சீசனாக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தனது கடைசி போட்டி சென்னையில்தான் இருக்கும் என அவரே முன்னர் ஒருமுறை சொல்லி இருந்தார்.