போர்ட் எலிசபெத்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி, 56 பந்துகளில் 87 ரன்களை குவித்தார்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 26-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. குரூப் மற்றும் நாக்-அவுட் என 23 போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தத் தொடரில் இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. முதல் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா வீழ்த்தியது. கடந்த சனிக்கிழமை அன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது.
இந்தச் சூழலில் இன்று அயர்லாந்து அணியுடன் இந்தியா விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஷெபாலி மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆட்டத்தை தொடங்கினர். ஷெபாலி, 29 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத், 20 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிச்சா கோஷ், ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
மறுமுனையில் ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி வந்தார். 56 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். தீப்தி, டக் அவுட் ஆனார். ஜெமிமா, 12 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது இந்தியா. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அயர்லாந்து விரட்டி வருகிறது. அந்த அணி முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.