டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 262 ரன்களை சேர்த்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 142 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கவாஜா 81 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முஹம்மது ஷமி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை சேர்த்தது. ரோஹித் சர்மா 13, ராகுல் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று தொடங்கிய ஆட்டத்தில் தொடக்கத்தில் நம்பிக்கை கொடுத்த ரோஹித் ஷர்மா (32), கே.எல்.ராகுல் (17) இணையை நாதன் லயன் தனது சுழலில் சிக்கவைத்து விக்கெட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். அதுமட்டுமில்லாமல், தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் புஜாராவையும் லயனின் சுழற்பந்து வீச்சு தப்பிக்கவிடவில்லை.
100-வது டெஸ்ட் ஆட்டத்தில் புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 44 ரன்களை எடுத்து கொடுத்துவிட்டு வெளியேறினார். ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களிலும், ஜடேஜா 26 ரன்களிலும் அவுட்டாக, 62 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை சேர்த்திருந்தது.
அடுத்து வந்த அக்சர் படேலும், அஸ்வினும் இணைந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அக்சர் படேல் 74 ரன்களிலும், அஸ்வின் 37 ரன்களிலும் அவுட்டாக, அடுத்து வந்த ஷமி போல்டானார். இதனால் 83.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 262 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரிலிருந்து 1 ரன் பின்தங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளையும், டாட் மார்பி, மேத்யூ தலா 2 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.