தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி: 2023-24 மற்றும் 2024-25-ம் ஆண்டு சீசனுக்கான தமிழக கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சுலக் ஷன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
56 வயதான முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சுலக் ஷன் குல்கர்னி மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி உள்ளார். அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 65 ஆட்டங்களில் 3,332 ரன்களை சேர்த்துள்ளார் சுலக் ஷன் குல்கர்னி.
இளையோர் தடகள போட்டி:தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் 4-வது மாநில அளவிலான இளையோருக்கான (யு-18, யு-20) தடகள சாம்பியன்ஷிப் சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று (18-ம் தேதி) முதல் இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 1,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் (18 வயதுக்குட்பட்டோர்) பிரிவில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் கர்நாடகாவில் வரும் மார்ச் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள 18-வதுதேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள்.
ஜூடோ சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன், ஜூடோ ஃபெடரேஷன் இந்தியா, இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இணைந்து தேசிய சப்-ஜூனியர் மற்றும் கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் தொடரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை நடத்துகிறது. இந்த தொடரில் 28 மாநிலங்களில் இருந்து 1,100 மாணவர்கள் கலந்து கொண்டு 2500- க்கும் மேற்பட்ட போட்டிகளில் மோதுகின்றனர்.