முல்தான்: நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக 36 பந்துகளில் 75 ரன்கள் விளாசியுள்ளார் ரைலி ருசோவ். இதற்கு முந்தைய போட்டியில் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 78 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
பெஷாவர் அணிக்கு எதிரான போட்டியில் முல்தான் அணி வீரர் ஷான் மசூத் அவுட் ஆனதும் களமிறங்கினார் ருசோவ். வந்தது முதலே அதிரடி ஆட்டத்தை துவங்கினார். 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 75 ரன்களை குவித்து அவுட்டானார். 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் இதில் அடங்கும். இந்தப் போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 208.33. இந்தப் போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் அணி வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக 56 பந்துகளில் 109 சதம் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெஷாவர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 23 பந்துகளில் அரைசதம் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் மில்லர் உடன் இணைந்து நீஷம் வீசிய ஒரு ஓவரில் 21 ரன்கள் எடுத்தார். உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு லீக் தொடர்களில் இவர் விளையாடி வருகிறார்.